பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு ஆசிரியர் ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 197 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் டிசம்பர் 7ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து இப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண்ணை தொடர்பு கொண்டு கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் தங்களை அடிக்கடி தொட்டு பேசுவதோடு இரட்டை அர்த்தத்தல் பேசுவதாகவும், வீட்டிற்குச் சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு செய்கின்றனர் என புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் பெருமாள்கோவில் அரசுப் பள்ளிக்குச் சென்று விசாரணை செய்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், விருதுநகரைச் சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜை கடந்த 24ம் தேதி கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட்வளவன் பாபுவை போலீசார் தேடிவந்த நிலையில், தற்போது அவர், ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.