மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு, ஒப்பந்த ஆண் ஊழியர் பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் சங்குமணி தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன் களப்பணியாளர்களாக இருந்து சேவையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் தூய்மை பணி , வாட்ச்மேன் பணிகளை மேற்கொள்ள இரண்டு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் நிலையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் மோகன் என்பவர் அவருடன் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒப்பந்த பெண் பணியாளர்கள் கூறுகையில், “அவருக்கு பிடித்தது போல் நடந்து கொண்டால் வேலைகள் குறைவாக தருவார். இல்லையென்றால் பணிச்சுமையை அதிகப்படுத்தி விடுகிறார். மேலும், புகார் அளித்து வேலையிலிருந்து நீக்கி விடுவேன் என்றும் மிரட்டுவார். இதனால் பல பெண்கள் குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு ஆளாகி பணியிலிருந்து நின்று விட்டனர். தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இது போன்ற பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்து வருகிறார். இதனை மருத்துவமனை உயரதிகாரிகளிடம் பலமுறை எழுத்துப் பூர்வமாக புகார் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொரோனா காலத்திலும் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக நாங்கள் இது போன்ற ஆபத்தான பணிகளை செய்து வருகின்றோம். இது போன்ற பாலியல் தொல்லைகள் தருவது தங்களுக்கு மேலும் மன உளைச்சலை அளிக்கிறது. தங்களது புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூட தயங்க மாட்டோம்” என அப்பெண்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
மேலும் நோயாளிகளிடமும் நோயாளிகளின் பார்வையாளர்களிடம் மோகன் மிகவும் தவறாக நடப்பதாகவும் அவர்கள் புகார்களை தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் சங்கு மணியிடம் கேட்டபோது சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர் மோகன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவது தொடர்பான புகார் தற்போது தான் தன்னுடைய கவனத்திற்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.