பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரது உதவியாளர்கள் மற்றும் ஓட்டுனரும் தலைமறைவாகி விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக காவல் ஆணையர் அலுவலத்தில் கடந்த 28ஆம் தேதி துணை நடிகை ஒருவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது கட்டாய கருக்கலைப்பு உட்பட 6 பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதையடுத்து மணிகண்டனை விசாரணைக்காக நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய போதும் அவர் ஆஜராகவில்லை. இதனால் தலைமறைவான மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இதனால் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து மணிகண்டனை கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் அமைச்சராக மணிகண்டன் இருந்தபோது இருந்த அவரது ஓட்டுனர், பாதுகாப்பு காவலர், உதவியாளர் ஆகியோரை நேரில் வரவழைத்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில், மதுரையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரைக்கு 2 தனிப்படை போலீசார் விரைந்து சென்று தேடி வருகின்றனர்.
மேலும் மணிகண்டனின் அனைத்து செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதால் மணிகண்டனை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிகண்டனின் தற்போதைய ஓட்டுனர், 2 உதவியாளர்கள் ஆகியோரை வைத்து மணிகண்டனை நெருங்க நினைத்த போது அவர்களது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அவர்கள் தலைமறைவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.