திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் கழிவுகளை சுத்தம் செய்து வருவதாக துப்புரவு பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதால் விஷவாயு தாக்கி பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பொன்னேரி பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் எதுவும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் பணி புரியும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடையை அள்ளி வருகின்றனர். ஏற்கெனவே விஷ வாயு தாக்கி உயிரிப்புகள் தொடரும் நிலையில் இந்தப் பேரூராட்சியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் எதுவுமே அணியாமல் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுக்கான ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் பாதுகாப்பு உபகரணங்களை பேரூராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், தேவையான உபகரணங்கள் உள்ளதாகவும் அவை பயன்படுத்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.