செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு, உடுமலைப்பேட்டை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் வேடபட்டியில் அமராவதி அணை பிரதான கால்வாயில் இருந்து சுமார் 200 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக கான்கிரீட் அமைத்து கிளை வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்க்காலில் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாகும்போது, விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் சென்று பயிர்கள் சேதமடைவதாகக் கூறி அந்தக் கிளை வாய்க்காலின் கான்கிரீட் கரைகள் சிலரால் சட்டத்திற்கு புறம்பாக உடைக்கப்பட்டு, வேறுவழியாக தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீர், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிக்க: 2025 IPL: CSK-வுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த தோனி..? உற்சாகமாகும் ரசிகர்கள்!
முறையாக வடிகால் அமைக்காமல் முறைகேடாக வாய்க்கால் கரை உடைக்கப்பட்டு தண்ணீரைத் திருப்பி விடுவதால், தாங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் ஓய்வுபெற்ற தாசில்தார் தயானந்தன் என்பவர் அவரது விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்வதை தடுப்பதற்காக, முறைகேடாக உடைக்கப்பட்ட கால்வாயை அடைக்க விடாமல் தடுப்பதாகவும், அதை எதிர்த்து கேள்விகேட்ட மக்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு மடத்துக்குளம் வட்டாட்சியர் பானுமதி, பாசன சங்கத் தலைவர் மயில்சாமி, நெடுஞ்சாலைத் துறை ஏ.டி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கால்வாய் உடைக்கப்பட்டதை உறுதி செய்தனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நேரில் வராததால், அவர்களுடன் பேசிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்று கூறிச் சென்றனர்.