தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்த போது 141 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்த முருகேஷ் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையிடம் இருந்து இது தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார். கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்த போது உயிரிழந்தவர்களில் வாரிசுதாரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கழிவு நீரை அகற்ற என்னென்ன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என எழுப்பட்ட கேள்விக்கு டெசிலேட்டிங், ஜெட் ராடிங், ஜெட்டிங் கம் சக்சன், சூப்பர் சக்கர், கிராப் பக்கெட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பணியில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நகராட்சி, மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கழிவு நீர் கால்வாய் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.