காதலன் காந்தியின் தற்கொலைக்கு நான் காரணமல்ல என சின்னத்திரை நடிகை நிலானி விளக்கமளித்துள்ளார்.சின்னத்திரை நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்களில் நடித்து வருகிறார்.
Read Also -> கண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி
இந்நிலையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த காந்தி என்பவரை நிலானி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி நிலானியை காந்தி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக படப்பிடிப்பில் அவர் தகராறு செய்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், காந்தி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். இதனால் மனமுடைந்த கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த நிலானி மனு ஒன்றி அளித்துள்ளார், அதில் " காதலன் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணமல்ல. காதலன் காந்தியை திருமணம் செய்ய நினைத்திருந்தேன். குடிபழக்கத்துக்கு அடிமையாகி இருந்த காந்தி என்னிடம் நிறைய பணத்தை வாங்கியதால், அவரிடம் இருந்து ஒதுங்கியிருந்தேன். நானும், காந்தியும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேண்டுமென்றே பரப்பபடுகின்றன. இதனால் சமூகவலைத்தளங்களில் என் புகைப்படங்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.