காவல்துறையினர் குறித்து தவறாக கருத்து தெரிவித்த சின்னத்திரை நடிகை நிலானிக்கு ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் படப்பிடிப்பு ஒன்றில் காவல்துறை சீருடை அணிந்து நடித்த நிலானி, காவல்துறையை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது அவதூறு பரப்புதல், கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுதல் உட்பட 4 பிரிவுகளில் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பின்னர் நீண்ட நாட்களாக நிலானி தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் நிலானியை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். சைதாப்பேட்டை 17 குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலானியை, ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அங்காளேஸ்வரி உத்தரவிட்டார். ஜாமின் கேட்டு நிலானி தாக்கல் செய்துள்ள மனு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.