திருநங்கைகளின் வசதிக்காக திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் தனி கழிவறை திறக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் உள்ள பொது இடங்களில் இதேபோல திருநங்கைகளுக்காக தனி கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வீட்டில் ஆசையாக வளர்க்கும் குழந்தை திருநங்கையாக மாற ஆரம்பிக்கிறது என தெரிந்தாலே பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் அவர்களும் படிக்கின்ற வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஒருவேளை உணவிற்காக கூட பெரிதும் சிரமப்படுகிறார்கள். படித்த திருநங்கைகளுக்கும் பெரியளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. சாதாரண மனிதனுக்கு எளிமையாக கிடைக்கின்ற அனைத்தையும் அவர்கள் போராடித் தான் பெறுகின்றனர். பொது இடங்களிலும் அவர்கள் சந்திக்கும் பிரச்னை ஏராளம். அதில் ஒன்றுதான் பொது இடங்களில் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படுவது. இதற்காக பல சூழ்நிலைகளில் அவர்கள் அவமானப்படுத்தப்படும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் திருநங்கைகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட அரவாணிகளின் தாய் விழுதுகள் அமைப்பு சார்பில், திருவள்ளூர் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் திருநங்கைகளுக்கென தனி கழிவறை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இதனால் திருநங்கைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தனி கழிவறைகள் அமைக்க வேண்டும் எனவும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.