கோயம்பேடு சந்தையில் தக்காளி கிரவுண்டுக்கு ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

கோயம்பேடு சந்தையில் தக்காளி கிரவுண்டுக்கு ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு
கோயம்பேடு சந்தையில் தக்காளி கிரவுண்டுக்கு ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு
Published on

நீதிமன்றத்தின் உத்தரவுபடி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றின் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பொதுமக்களின் நலன் கருதி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தக்காளி வியாபாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ‘தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும்’ என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறிவந்தது.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும்’ என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில் இன்று காலை 4 மணி முதல், அடுத்த 4 வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தக்காளிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் இன்று ஒதுக்கவில்லை என நீதிபதி சுரேஷ்குமார் முன், சங்கம் தரப்பில் வக்கீல் சிவா ஆஜராகி இன்று முறையிட்டார். சங்கம் தரப்பிலிருந்து, கமிட்டி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அதிகாரிகள் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞரையும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரையும் ஆஜராக உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ‘நீதிமன்றத்தின் உத்தரவு படி, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கென ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது’ என கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றின் வழக்கறிஞர்கள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளது.

முகேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com