“அதிமுக ஆட்சியில் 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. டெல்டா பகுதியிலேயே 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது” என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய செந்தில் பாலாஜி, “கடந்த 26.2.2021 அன்று தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 25.2.2021 அன்று தான் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதுவரை டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் தான் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. சொல்லப்போனால் அவர்கள் (அதிமுக) ஆட்சியில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க கட்டமைப்பு இல்லை. அதனால் தான் கடைசி நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அதுவும் 1.4.2021 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்து. அதுவரை அவர்களால் 24 மணி நேரம் மின்சார வழங்கப்படவில்லை.