சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது சரியானதுதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு கடந்த 7ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.
இந்த நிலையில் அமலாக்கக் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இன்று பிற்பகல் அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டு, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜி காவலை நீட்டிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 25 வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே செந்தில் பாலாஜியிடம் இதுவரை செய்யப்பட்ட விசாரணை தொடர்பாக 3,000 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. அனைத்து ஆவணங்களையும் இரும்புப்பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.