முடிவுக்கு வந்தது 471 நாட்கள் சிறைவாசம்.. புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 50க்கும் அதிகமான முறை செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக பிணை வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி
உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜிகோப்புப் படம்
Published on

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி பிணை கேட்டு தொடர்ச்சியாக தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிPT

வழக்கு விசாரணையின் போது, 13 மாதங்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், விசாரணை எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை என அவர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணை நிறைவடைய நீண்ட காலமாகும், நீண்ட நாட்களாக ஒருவரை விசாரணை என்ற பெயரில் சிறையில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்ற காரணங்களுக்காக அவருக்கு பிணை வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி
”அஜய் ஜடேஜா எங்களுக்காக அழுதார்” - ஆப்கானிஸ்தான் வீரர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடவும், சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. விசாரணை கைதியாகவே இருப்பதால் அடிப்படை உரிமை கருதி நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், 25 லட்சம் ரூபாய்க்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும், வெளிநாடு செல்லத் தடை உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றத்தில் கிடைத்த நிபந்தனை பிணை தொடர்பாக முறையிட்டனர்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் கார்த்திகேயன் தெரிவித்தார். இதில், “பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை” என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி
கொட்டுக்காளி | மெய்யழகன் | டிமாண்டி காலனி 2 | ஹிட்லர் | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!

இந்நிலையில் எழுத்துப் பூர்வமான உத்தரவாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை 69 ஆண்டுகளாக தெரியும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களது ஆவணங்கள் அவருக்கு 60 ஆகிறதாக காட்டுகிறது. இதைத்தான் அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். அதாவது தாக்கல் செய்த உறவினர்களது வயது 60 ஆக இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

விசாரணை முடிவில் செந்தில்பாலாஜியின் ஜாமீன் உத்தவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். அமலாக்கத்துறையும் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இருவர் ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தனர். ஜாமீன் உத்தரவாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SenthilBalaji
ChennaiCourt
SenthilBalaji ChennaiCourt

சென்னை புழல் சிறைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. திமுகவினர் புழல் சிறை முன் குவிந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தார். குவிந்திருந்த திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com