செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர், அமலாக்கத்துறை சார்பில் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, அபிராமபுரத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பு, கரூரில் செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அசோக் குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் இருப்பதால், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
பண மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக இன்று 20 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும், அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்த பிறகு, வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சம்மனுக்கு, அசோக்குமார் தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை தயார் படுத்தவும் - இது சட்ட ரீதியான நகர்வு இருப்பதால் இந்த தேதியில் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது