சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நேற்று காலை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
‘திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும்
ரூ. 25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும்
மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’
உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கியது.
இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த பிறகு முதல் வெள்ளியான இன்று காலை 11 மணியளவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை மண்டலம் -1 ல் சரியாக 11.10 மணியளவில் விசாரணை அதிகாரி கார்த்திக் தாசரி முன் ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றார்.
இதனால், அங்கு 25 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் முறையாக வரும் திங்களன்று மீண்டும் கையெழுத்திட ஆஜராவார் என்பது குறிப்பிடத்தக்கது.