செய்தியாளர்: தமிழரசன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி, நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மாஸ்க் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுமியின் கையை பிடித்து இழுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அவர்களிடமிருந்து தப்பிக்க தன்னிடமிருந்த சிலம்பம் கம்பால் அவர்களை தாக்கி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பியதாக சிறுமி கூறியுள்ளார். இந்நிலையில் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்குப் பையில் குழந்தை ஒன்று இருந்ததாக சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செஞ்சி போலீசார் பள்ளி மாணவியிடம் நடத்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கவினா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனிப்படை போலீசார் பள்ளி மற்றும் கிராம பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர், தையூரில் உள்ள பள்ளிக்கு சென்று சிறுமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.