செங்கல்பட்டில் அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 25ஆண்டுகளாக, 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத்தனை குடும்பங்கள் வசித்துவரும் அப்பகுதியில் இப்போதுவரை நியாய விலை கடை இல்லாமல் இருக்கிறது. தங்களுக்கு ஒரு நியாய விலை கடை அமைத்துத்தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் அதை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட 7 வார்டில் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு சுமார் 25ஆண்டுகளாக 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு செங்கல்பட்டு நகராட்சி சார்பில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக நியாயவிலை கடையில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது.
இப்பகுதி மக்கள் அனைவரும் தற்போது வடமலை பள்ளி அருகே உள்ள நியாய விலை கடை எண்-10ல் பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர். இந்த நியாய விலை கடை 5,6,7 ஆகிய வார்டுகளில் உள்ள மக்களை உள்ளடக்கியது. இதனால் இந்த ஒரு நியாய விலை கடையில் சுமார் 3000 கார்டுகளுக்கான பொருட்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் மீதான தட்டுப்பாடு அங்கு அடிக்கடி ஏற்படுவதாகவும், அக்காரணத்தால் பொருட்களை பெற மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் 7வது வார்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி அம்பேத்கர் நகரில் இருந்து எண்10-ல் உள்ள நியாய விலை கடைக்கு செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் கூடுதல் சிரமம் உருவாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இக்காரணங்களால், தங்களுக்கென புதிய நியாய விலை கடையை அம்பேத்கர் நகர் பகுதியில் அமைத்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தங்களின் இந்த கோரிக்கையை கடந்த 10 ஆண்டுகளாக துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை வைத்து வருவதாகவும், இதுவரை மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகளில் ஒருவர்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த வார்டு மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இனியாவது தங்கள் பகுதியான அம்பேத்கர் நகரில் புதிய நியாய விலை கடை அமைத்து தரப்படுமா என எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் மக்கள்.
- உதயகுமார்