ஓபிஎஸ் அணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் மற்றும் அவரது எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்ரபாணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம், உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது. ஆகவே, சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது செம்மலை கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவை தொடர்பான வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி கோரிக்கை வைக்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.