கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி ‘அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செய்திருந்தது. மாநாடு நடைபெறுவதற்கு காரணமாக இருந்து உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, பீடா என தடபுடலாக விருந்தளித்து அவர்களுக்கு நன்றி கூறினார்.
“மதுரை மாநாடு உண்மையிலேயே எழுச்சியான மாநாடாக இருந்தது. அதிமுக மாநாடு வெற்றி பெற முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிசாமிதான். மாநாட்டில் அப் டூ டேட் வரை கவனம் செலுத்தி ஒவ்வொரு பணியையும் எடப்பாடி பழனிசாமி கவனித்தார். இதனால், எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக அதிமுக மாநாடு நடைபெற்றது. வரலாற்றில் அதிமுகவை தவிர எவனும் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி இருக்க முடியாது. புதுமையாக நவீனமாக அதிமுக மாநாடு நடைபெற்றது.
படத்திற்கு ப்ரோமேஷன் போல அதிமுக மாநாட்டை நாங்கள் ப்ரோமோட் செய்தோம். எவ்வளவு தான் ப்ரோமோட் செய்தாலும் படங்கள் தோல்வியடையும். ஆனால் அதிமுக மாநாடு சிறப்பாக நடைபெற்றது”
“கடந்த 2014-ல் கூட்டணி இல்லாமல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடியார் என்ன நினைக்கிறார் என எங்களுக்கே தெரியாது. உங்களுக்கும் எங்களுக்கும் ஏன் கடவுளுக்கே கூட தெரியாது. படைத்த பிரம்மனுக்கும் எடப்பாடி மனதிற்குள் என்ன நினைக்கிறார் என தெரியாது. அவர் கூட்டணி குறித்து மனதிற்குள் ஏதாவது வைத்திருப்பார். அவர் பார்வையில் கூட்டணி குறித்து முடிவு செய்வார்”
"ஒரு மாநாட்டை நடத்தி திமுகவிற்கு அதிர்வேட்டு பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் எடப்பாடி"
“அதிமுக மாநாட்டை பார்த்து முதல்வர் நடுங்கிப் போய் கிடக்கிறார். அதிமுக மாநாட்டை பார்த்து ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து மதுரையில் மட்டும் வாபஸ் வாங்கினர். அதற்கு காரணம் அதிமுக மாநாடு. எடப்பாடி பழனிசாமிதான். அரசியலில் காய் நகர்த்தல், சதுரங்க வேட்டை ஆடுவதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயந்து போய் உள்ளது. அதற்காகத்தான் டிசம்பரில் திமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளனர். திமுகவுக்கு எப்பவுமே தானா சேர்ந்த கொள்கை கூட்டமாக இருக்க மாட்டார்கள். காக்கா கூட்டம் தான் சேர்ப்பார்கள்”
“ஒரு கல்யாணத்தில் எல்லாருக்குமே சாம்பார், கூட்டு, பொரியல் சரியாக இருக்குமா? அது சமைப்பவர்கள் செய்த தவறு. அதிமுக மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எல்லாம் உணவுகளை வாரி வாரி வழங்கிய வள்ளல் பெருமான் தான் எடப்பாடி. அஷ்டலெட்சுமியே வந்தாலும் மூக்கு சரியில்லை, முடி சரியில்லை என சொல்லுவார்கள். குறை சொல்லுபவன் எப்படி வேண்டுமானாலும் சொல்வான், எதை வேண்டுமானலும் சொல்லுவான். 300 கவுண்டர்களில் உணவு கொடுத்தோம். அதில் பத்து அண்டா உணவு வீணானதை பேசி திசை திருப்புகிறார்கள்”
“நாங்கள் வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவர்கள். எங்களுக்கு ஜாதகம் பார்க்கத் தெரியாது. சிவசக்தி என நிலவில் பெயர் வைத்த பிரதமரிடம் ரயில் ஏறி போய் ஏன் பெயர் வைத்தீர்கள் என ஊடகத்தினர்தான் கேட்க வேண்டும். காலை உணவு திட்டத்தில் உப்புமா கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். நாட்டை காப்பாற்றியதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் தனித்து தேர்தலில் நிற்கட்டும். ‘இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஆட்சி’ ‘முதல்வர் தான் நாளை பிரதமர்’ என அறிவிக்க சொல்லுங்கள் பார்ப்போம். மோடியா ஸ்டாலினா என 2024 தேர்தலுக்குள் அறிவித்து, தனித்து நிற்கச் சொல்லுங்கள்”
“அதிமுக மாநாட்டை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக உதயநிதி ஏதாவது பேசுவார். அதிமுக மாநாடு மூலம், தான் வலுவாக மாறிவிட்டேன் என எடப்படியார் காண்பித்து விட்டார். கூட்டணி கட்சிகள் அவரிடம் கூட்டணி குறித்து கேட்பார்கள். இது சாதாரணம்”
“மதுரை ரயில் தீ விபத்து நடக்கக் கூடாத ஒன்று. எங்களது இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என பேசினார்.