செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை பரவை ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
“திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து பறந்து பறந்து கோரிக்கை விடுக்கிறேன். ஆனால், செவிடன் காதில் ஊதும் சங்கை போல அது கிடப்பிலேயே உள்ளது. 3 ஆண்டுகளாகியும் எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் செய்து தரவில்லை. சட்டமன்ற தொகுதி வாரியாக நிலுவையில் உள்ள 10 திட்டங்கள் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதினோம், 10 நிலுவை திட்டங்களில் 1 ஒரு திட்டத்தை கூட முதலமைச்சர் நிறைவேற்றவில்லை.
மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக்கூடிய அம்ருத் குடிநீர் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது, மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்தவொரு பயனும் இல்லை, தமிழக அரசிடம் பேசி திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் முன் வரவில்லை
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயமே விற்கப்படவில்லை. திமுக ஆட்சியில்தான் கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வந்தது. செந்தில்பாலாஜிதான் கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுகவினர் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் என்பதால் வேண்டுமென்ற அதிமுகவை அவையை விட்டு வெளியேற்றி நடவடிக்கை எடுத்தார்கள். கேள்வி நேரத்தில் முதலமைச்சரை பேச விட்டு தனிச்சட்ட முறையை அவையில் செய்கின்றனர். வெறும் மைதானத்தில் கம்பு சுழற்றுவது போல, நாங்கள் இல்லாமல் முதல்வர் விளக்கம் கொடுக்கிறார். கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் இருந்த இடமே தெரியவில்லை.
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை, கள்ளச்சாராய மரணங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முழு பொறுப்பு, கள்ளக்குறிச்சிக்கு, முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை, கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப் பேரவையில் விதி எண் 56 படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை, ஆனால் விதி எண் 56 படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் பேசி உள்ளார், சட்டம், விதிமுறைகள் அனைவருக்கும் சமம்தானே? பின் எப்படி முதலமைச்சர் சட்டப் பேரவையில் பேசியுள்ளார்?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார், கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யலாமே! சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் விதமாக கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம், நாங்கள் ஸ்டாலினை போல எங்களுடைய சட்டைகளை கிழித்துக் கொண்டு சட்டப் பேரவையில் இருந்து வெளியேறவில்லை.
அரசு விற்பனை செய்யும் மதுபானத்தில் கிக் இல்லையே என அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், ஒரு அமைச்சர் சொல்லக்கூடிய வார்த்தையா இது. இது அமைச்சருக்கு அழகில்லை, திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக போதை மாடல் ஆட்சி, போதைப் பொருள் ஆட்சி என கூறலாம், அரசு மதுபானங்கள் கொள்முதலில் வெளிப்படை தன்மைகளுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்கு செல்வார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுப்போம், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்பாரா?. 16 பேர் உயிரிழந்துள்ளதால் சம்பவ இடத்திற்கு பிரதமர் நேரில் வர வேண்டுமென விதி உள்ளது, கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்திருக்க வேண்டும்.
நல்ல தலைவர்கள் இல்லை என்று தற்போது இருக்கும் தலைவர்களை குறிப்பிட்டு நடிகர் விஜய் சொல்வில்லை. மாணவர்களிடம் பேசும் போது ஒரு அறிவுரையாகதான் நல்ல தலைவர்கள் இல்லை என குறிப்பிட்டு பேசினார். நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு, மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் அப்படி சொல்லியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா?, சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும்.
அரசியல் படிக்க லண்டன் செல்லும் அண்ணாமலை நன்றாக படிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துகள். கல்வி கற்க செல்லும் அண்ணாமலை மறைந்த தலைவர்களை இழிவாக பேசக்கூடாது என்பதை நன்றாக படித்து வரட்டும்.
நல்ல பண்புகளை கற்றுக் கொள்ளட்டும். தமிழக பாஜக தலைவராக ஐபிஎஸ் ஆக இருந்த அண்ணாமலை எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. படித்துவிட்டு மோடி, நட்டாவிடம் ஆலோசனை செய்யட்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும்” என கூறினார்.