மதுரை கோச்சடை பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட நியாயவிலைக் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, “தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலைதான். மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில், தலைவர்களை அண்ணாமலை மதிக்காமல் அரைவேக்காடுத்தனமாக பேசுகிறார்.
அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போதுதான் மக்கள் பாஜகவுக்கு என்ன பதிலடி கொடுத்துள்ளார்கள் என்பது தெரியும். அதன்பிறகுதான் அண்ணாமலை இருப்பாரா, தொடர்வாரா என்பதும் தெரியும். கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், எல்லா சமூகத்தையும், மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். பாரதிய ஜனதா அப்படி கிடையாது. ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பதுதான் மன வேதனை” என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக - அதிமுக கூட்டணி வைக்கலாம் என தவெக நிர்வாகியின் கருத்து குறித்த கேள்விக்கு, "விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள். 2026 தேர்தல் வரும்போது பார்க்கலாம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்குதான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் அவர் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம். அதிமுகவுக்கு இப்போ ரூட் கிளியர்" என்று பதிலளித்தார்.