சென்னையில் காங்கிரஸ் பொருளாதார மாடல் எனும் கருத்தரங்கில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் “பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம்” என்று மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம் “31 வருடங்களாக இந்தியா உலகளாவிய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. 1991லிருந்து இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக வளர்ந்துள்ளது. அரசியல் தலையீடுகளால் ஏற்படும் பொருளதார மாற்றங்கள் பற்றி பேச போகிறேன். 2004 லிருந்து 4 முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றமடைந்துள்ளது. 7.5 % லிருந்து 9% என மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது.
230 மில்லியன் மக்கள் முன்னேற்றம் அடைந்தனர். நமது மக்கள் தொகையில் 50 % க்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்கும் கீழ் உள்ள இளைஞர்கள். பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த 31 வருடம் பொருளாதாரம் பற்றி பல அனுபவங்களைக் கொடுத்துள்ளது. பிராந்தியங்களுக்கு இடையே வேறுபட்ட பொருளாதாரம் நிலவுகிறது.எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம். பசியால் வாடுபவர் நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 நாடுகளில் 101 வது இடத்தில் உள்ளது. 8.72 லட்சம் இடங்கள் மத்திய அரசு பணிகள் காலியாக உள்ளது. ஆனால் 10 லட்சம் பணி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது. காங்கிரஸால் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். எங்களுடைய முக்கிய இலக்கு இது தான்.” என்று தெரிவித்தார்.