செய்தியாளர்: சாந்தகுமார்
வங்கதேசம் ஜானியாபாத் என்ற இடத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். அப்போது அவரை கைது செய்த அந்நாட்டு ராணுவத்தினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சேலையூரில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபரிடம் இருந்து தமிழ்நாடு அரசின் காவல்துறை அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த அடையாள அட்டையில், அவரது பெயர் ஜான் செல்வராஜ் என்று இருந்தது தெரியவந்ததை அடுத்து இந்திய ராணுவம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு பின் ராணுவம் மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டை சுமார் 6 வருடங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது வழங்கப்பட்ட அடையாள அட்டை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து வங்கதேச ராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள நபர் சேலையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி விடுப்பில் சென்ற அவர் 21 ஆம் தேதி பணிக்கு திரும்பவில்லை, செல்போன் எண்ணும் ஸ்சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறை ஆலோசித்து வருகின்றனர்.