தமிழ்நாடு ராமர் கோவில்களில் தடையா? நிர்மலா சீதாராமன் Vs சேகர்பாபு இடையே தொடரும் ட்விட் மோதல்!

ராமர் கோவில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்ததாக கூறி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதற்கு சேகர் பாபு மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் Vs சேகர்பாபு
நிர்மலா சீதாராமன் Vs சேகர்பாபுபுதிய தலைமுறை
Published on

ராமர் கோவில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்ததாக கூறி, இன்றைய நாளிதழில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இதைக்குறிப்பிட்டு தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்து தனது X வளைதளபக்கத்தில் பதிவிட்டார்.

தன் பதிவில், அறநிலத்துவையின் கீழ் உள்ள கோவில்களில் ராமர் பெயர் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார் நிர்மலா சீதாராமன். அதற்கு சேகர் பாபு மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் பதிலளித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் கோப்பு புகைப்படம்

இது குறித்து விரிவாக பார்க்கலாம்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் இன்று மற்றும் நாளை அவர் கலந்து கொள்ள இருக்கிறார். குறிப்பாக நாளைய தினம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கிட்டத்தட்ட 1000 உறுப்பினர்களுடன் காஞ்சிபுரத்தில் இருந்தபடி நேரடியாக இந்த நிகழ்வை காணொளி வாயிலாக அவர் காண இருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் காஞ்சிபுரத்தில் விரிவாக செய்யப்பட்டது. பந்தல் அமைக்கும் பணியும் மும்மரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என தெரிவித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு சார்பில் சில அதிகாரிகள் மிரட்டுவதாகவும், குறிப்பாக பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்கள் மிரட்டுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இத்துடன் தனியார் நாளிதழில் வெளியான ஒரு செய்தியை குறிப்பிட்டு, “நாளை அயோத்தியில் ராமருக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் ராமர் கோவில்களில் ராமர் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்கள் உள்ளன.

தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்ற குற்றச்சாட்டையும் அவர் நேரடியாக வைத்திருக்கிறார்.

ஏற்கெனவே இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, அதில் ‘இதுபோன்ற ஒரு உத்தரவை நாங்கள் வாய்மொழி வாயிலாகவோ எழுத்துப்பூர்வமாகவோ எங்கும் வழங்கவில்லை’ என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தனது X வளைதள பக்கத்தில், “இப்படிபட்ட இந்து விரோத வெறுக்கத்தக்க செயல்கள் அனைத்தையும் நாங்கள் கண்டிக்கிறோம்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நிர்மலா சீதாராமன் முன்வைத்து இருக்கிறார். தமிழகத்தில் தொடர்ச்சியாக நிர்மலா சீதாராமன் பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்புகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நிர்மலா சீதாராமனின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது X வளைதள பக்கத்தில் “தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ அன்னதானம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்கு புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்திற்குரியது” என்று பதிலளித்துள்ளார்.

இதற்கு மீண்டும் பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், “திரு. சேகர் பாபு அவர்களே, உங்கள் tweet க்கு பதில்கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை TN முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது

மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள்” என்றுள்ளார்.

இப்படியாக இந்த வார்த்தை மோதல் வலுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com