செய்தியாளர்: செ.சுபாஷ்
துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் துபாயில் இருந்து இன்று காலை 10:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படி இருந்த ராமாதபுரம் மாவட்டத்தைச் சேர்த்த அஸ்ரப் அலி என்பவரின் மகன் உமர் பாரூக் (38) என்பவரை அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் ஏதோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து 16 கேப்சூல் உருண்டைகளை வெளியே எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உருண்டைகளை சோதனை செய்தனர். அதில், பேஸ்ட் வடிவில் 24 லட்சத்து 62 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து கடத்தி வந்த சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.