தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் முன்னெடுக்கும் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் கள் இறக்குவதற்கான தடையை நீக்கி, கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற சனவரி 21-ம் தேதி முதல் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். கள் உற்பத்தியை கள்ளச்சாராயத்தோடு தொடர்புப்படுத்தி அவதூறு பரப்புவதோடு, கள் இறக்கும் பனையேறிகள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும், எரிசாராயம் வைத்திருந்ததாகவும் பொய் வழக்குகள் பதியப்படும் நிலையில் கள் உணவுப்பொருள் தானேயொழிய போதைப்பொருள் அல்ல; ஆதலால் கள்ளினைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதனை உணர்த்தும் விதத்தில் இப்போராட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பிருந்தே பனைப் பொருட்கள் மக்களிடம் புழக்கத்தில் இருந்துள்ளது. அந்த வகையில் தமிழர்களின் வாழ்வியலில் மிக நெருங்கிய உணவாக இருந்தது பனங்கள் தான். பல நேரங்களில் மக்களுக்கான மருந்தாகவும், திருவிழாக் காலங்களில் கேளிக்கை பானகமாகவும், பருவக் காலங்களில் தினசரி பயன்பாட்டிலும் இருந்துள்ளது.
இறக்கப்படும் பனங்கள்ளில் மதுத்தன்மையின் உள்ளடக்கம் 1% முதல் 6% வரை மாறுபடும். கூடுதலாக, கணிசமான அளவு நேரடி நுண்ணுயிர்கள், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் வடிவில் எஞ்சிய சர்க்கரை, சிறிய அளவு புரதங்கள், லிப்பிடுகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டே பனங்கள் மற்றும் தென்னங்கள் ஆகியவை பனம்பால் மற்றும் தென்னம்பால் என்ற பெயரில் தமிழ்த்தேசிய மதுபானங்களாக அறிவிக்கப்படும் என்றும், இவற்றால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிலும், பனைப் பொருளாதாரத் திட்ட வரைவிலும் குறிப்பிடப்பட்டது.
தமிழ்நாட்டில் நிலவும் கள் இறக்குவதற்கான தடையை நீக்கும் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்த நிலையில், தமிழ்நாடு கள் இயக்கம் முன்னெடுக்கின்ற கள் இறக்கி விற்கும் போராட்டத்தினை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். மேலும், பனை மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகுந்த அக்கறை உள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாடு அரசு, மிக மலிவான தரத்துடன் உருவாக்கப்படும் டாஸ்மாக் மதுவிற்கு மாற்றாகவும், டாஸ்மாக் மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழர் உடல் மற்றும், மனநலனை மீட்டெடுக்கும் வகையிலும் கள் சந்தையினைத் தடை நீக்கி மீட்டுருவாக்கம் செய்து, அதன் வழி பனைசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, காலங்கடத்தாமல் கள் இறக்குவதற்கான தடையை நீக்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.