வடமாநில மக்கள் குறித்து பேசிய வீடியோவை திட்டமிட்டு பிரஷாந்த் கிஷோர் மூலம் பரப்பி வழக்குப்பதிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”வடமாநில தொழிலாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ராமேஸ்வரம் மற்றும் கரூரில் இதுபோன்று நடந்திருக்கிறது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருக்கிறது. இதைதான் பேசினேன். அதேபோல் வடமாநில தொழிலாளர்கள் தமிழகம் வந்தால் ஏன் உள்நுழைவு போன்ற எந்த நடைமுறையும் இருப்பதில்லை. அவர்கள் குறித்த பதிவுகள் தமிழகத்தில் எதுவுமே இல்லை.
பிரஷாந்த் கிஷோர் பீகார் மக்களுக்காக பேசுகிறார். தமிழக மக்கள் குறித்து அவருக்கு என்ன தெரியும்? ஆந்திராவில் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த போது என்ன செய்தார்? இலங்கையில் தமிழக மீனவர்கள் கைதுக்கு என்ன பேசுவார்? நான் தமிழ் மக்களுக்காக பேசுகிறேன். தமிழர்களுக்கான வேலைவாய்ப்புக்காக பேசுவேன்.
திட்டமிட்டு என் பேச்சை பிரஷாந்த் கிஷோர் மூலம் ட்விட்டரில் போடச் சொல்லி இருக்கிறார்கள். பின்னர் அதை வைத்து என் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.