தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், தன்னுடைய அடுத்தகட்ட பயணமாக அரசியல் களத்திற்குள் நுழைந்திருக்கிறார். இதற்காக, தன்னுடைய ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி மாணவர்களுக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்து வருகிறார்.
தவிர, அரசியல் தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து முழுநேரமும் அரசியலில் இறங்கும்வண்ணம் அவர், தாம் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்பாடுகள், கொடி ஆகியன விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதை அறிவிக்கும்பொருட்டு, கட்சியின் சார்பில் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் மாநாட்டை எங்கு நடத்தலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆய்வு செய்துவருகிறார். இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சில மாவட்டங்களில் இடங்களையும் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் தற்போது மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். திருச்சியில் மாநாடு அல்லது பொதுக்கூட்டம் நடத்தினால் அது வெற்றியாக அமையும் என அரசியல் கட்சியை தொடங்கும் அனைத்து அரசியல்வாதிகளும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்காத வகையில் நடிகர் விஜய் தாம் தொடங்க உள்ள தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் மாநாட்டை திருச்சியில் நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்காக மதுரையில் இடம் பார்க்கப்பட்டது. அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், ”தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்காக இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இடம் தேர்வான பிறகு விஜய் முறைப்படி அறிவிப்பார். தவெக தலைவர் விஜய் கொடுக்கும் ஆலோசனையின் படியே அனைத்தையும் செய்து வருகிறோம். அவர் ஆலோசனை இல்லாமல் எதையும் செய்ய மாட்டோம்” என்றார். அப்போது, ”மதுரை ராசியான இடம்; அரசியல் கட்சிகள் பல தொடங்கப்பட்ட இடம்; தவெக மாநாடு மதுரையில் நடைபெறுமா” என்ற கேள்விக்கு, “நீங்களே ராசியான இடம் எனச் சொல்லிவிட்டீர்கள்” என சிரிப்புடன் சூசகமாக மதுரை மாநாடு குறித்து கூறினார். இருப்பினும் அதுவும் இறுதியாகவில்லை எனத் தெரிகிறது.
மேலும், தமிழ்நாட்டின் மைய பகுதியாக திருச்சி இருப்பதாலும், வரலாற்ற சிறப்புமிக்க பல அரசியல் மாநாடுகள் திருச்சியில் நடந்திருப்பதாலும் திருச்சியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை ஒட்டி அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி சிறுகனூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் தவெக மாநாட்டுக்காக, திருச்சியை தேர்வு செய்திருப்பதாகவும், இதிலும் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இடம் இல்லை. நாங்களும் அதைக் கவனிக்கிறோம். நானும் கஷ்டப்படுகிறேன். தமிழகத்தில் பெரிய கூட்டம் கூடும் அளவுக்கு இடம் இல்லை. மதுரையிலும் இல்லை; திருச்சியிலும் இல்லை. நாங்கள் வழியில்லாமல் ஜிகார்னரில் பயன்படுத்தினோம். நான் 15இல் மாநாடு போடும்போது, தனியார் இடத்தைக் கெஞ்சி கேட்டு கதறி வாங்கினேன். அந்த இடத்திலும் காடு மண்டியிருந்தது. அதைச் சரி பண்ணினேன். அதுபோல், இதையும் சரி செய்ய வேண்டும்.
தனியார் இடம் என்றால், என்ன நடக்கும் என்று தெரியும். அவரை எவ்வளவு மிரட்டுவார்கள் என்றும் தெரியும். ஒரு கல்லூரியில் போய் என்னைப் பேச விட்டீர்கள் பார்ப்போம். உளவுத் துறை வரும்; அவரை எதுக்குப் பேசக் கூப்பிடுகிறீர்கள்? அவர் என்னவெல்லாம் பேசுவார் தெரியுமா? அவர் ஏதாவது பிரச்னைக்குரியதைப் பேசினால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா? இப்படியெல்லாம் கேட்டால், யார் பேசக் கூப்பிடுவார்கள்? இந்த மாதிரிதான் அந்த தனியார் முதலாளி இடம் கொடுத்தால், அவர் என்னை ஆளை விடுங்கப்பா என்றுதானே சொல்வார். அதுமாதிரி இடம் இல்லை. அந்த நெருக்கடியை நான் அனுபவித்ததைப் போன்று தம்பி விஜய்யும் அனுபவிப்பார். அதற்கு வேறு வழி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஒரேநாளில் 15 கின்னஸ் சாதனைகள்.. அமெரிக்க ’சீரியல் ரெக்கார்டு பிரேக்கர்’ அசத்தல்!