“தம்பி வெற்றிமாறன் மனித உருவத்தில் இருக்கக்கூடிய மிருகம்..”- ‘விடுதலை’யை பாராட்டும் சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரமிருந்தால் ஒரு நொடியில் அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து விடும்.
Seeman
Seemanpt desk
Published on

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, ‘மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்’ என கோரி இன்று காலை நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து சீமான் பேசுகையில், “கடந்த 2013-ல் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடைபெற்றது. அதே மீட்டர் கட்டணத்திற்கு இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஆட்டோவை ஓட்ட முடியும்? ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இன்று பிழைப்பே இல்லை.... வட இந்தியர்களை ஆதரித்து பேசுபவர்கள் எங்க ஆட்களையும் ஐயோ பாவம் என்று சொல்லுங்கள். சொந்த வாகனம் இருந்தாலும் இன்று உபர், ஓலாவிற்கு கீழ் தான் ஆட்டோ ஓட்டுநர்களால் வேலை செய்ய முடிகிறது. டீசல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 103 ரூபாய் என ஏற்றிவிட்ட பிறகு, 2013-ல் கொண்டு வரப்பட்ட அதே கட்டணத்திற்கு எங்களால் ஆட்டோவை ஓட்ட முடியாது.

டாஸ்மாக்கை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் இந்த அரசு, ஜொமேட்டோ ஸ்விக்கி போன்ற நிறுவனங்களை ஏற்று முறைப்படுத்தி நடத்தினால் வருவாயும் பெருகும், நாட்டின் வளமும் பெருகும். 24 மணி நேரம் டாக்ஸி ஓட்டுவதை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும். ஒரு பிரியாணிக்கு 80 ரூபாய் வரை, ஒரு பெரு முதலாளியின் நிறுவனமே எடுத்துச் செல்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரமிருந்தால் ஒரு நொடியில் அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து விடும். வரி கட்டி வாழ முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் கொடுப்பது இருக்கட்டும், முதலில் சுங்க கட்டணத்தை நிறுத்த சொல்லுங்கள்.

தம்பி வெற்றிமாறன் மற்றும் களஞ்சியம் ஆகச்சிறந்த படைப்புகளை இந்த தலைமுறையினருக்கு வழங்கி வருகிறார்கள்.

வெற்றிமாறன் மனித உருவத்தில் இருக்கக்கூடிய மிருகம். அந்த வெறியில் படம் எடுக்கிறார். மிகுந்த சிரமப்பட்டு காட்டிற்குள் சென்று விடுதலை படத்தை உருவாக்கி இருக்கிறார்.

பட்டினி சாவு வரை போராட்டம் நடத்துவேன் என போராட்டம் நடத்திய அண்ணன் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வெளிநாட்டில் இருந்து எங்கு பணம் வந்தது?

வேலை வாய்ப்பில் 80 சதவீதம் தமிழருக்கு கொடுங்கள். 20 சதவீதம் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள். குஜராத், மகாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களிலும் இதை பின்பற்றலாம். நிலம், வளம் என்னுடையதாக இருந்தாலும் வேலைவாய்ப்பு என்னுடையதாக இல்லை. இதை பேசினால் என்னை பாசிஸ்ட் என்கிறார்கள். உரிமைக்காக பேசினால் பாசிஸ்ட் என்றால், அதைத்தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com