நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பரப்புரையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத்தும், பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணனும் களமிறங்குகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, மரிய ஜெனிபர் வேட்பாளராக களமிறங்குகிறார். அவரை ஆதரித்து கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலில் போட்டியிடுவதற்கு பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். அப்போது தேர்தல் பத்திரத்தின் மூலம் வாங்கிய பணம் எல்லாம். அவங்களுக்கு பணம் கொடுப்பதற்கா ஆளில்லை. ரெண்டு பெரிய முதலாளி இடது கை வலது கையாக இருக்கின்றார்கள். அவரது மகன் திருமணத்திற்கு, உள்நாட்டு விமான முனையத்தை பன்னாட்டு விமான முனையமாக மாற்றினார்கள். அந்த அளவுக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள்.
எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மக்களவையில் எழுப்ப கேள்விகளையும் வைத்துள்ளோம். வரைவுகளில் கொடுத்துள்ளோம். உதாரணமாக ஒன்று சொல்கிறேன். இது மக்களாட்சி தானே. மக்களாட்சியின் தலைவர் குடியரசுத் தலைவர். ஆனால், குடியரசுத் தலைவர் மக்களால் தேர்வு செய்யப்பட முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான், குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். இதுமாதிரியான அமைப்பு ஜனநாயகத் துரோகம் என்கிறோம்.
நீங்கள் எம்.எல்.ஏவாக இருந்து எம்பிக்கு போட்டிபோட முடியும். நான் ஆசிரியராக இருந்து எம்.பிக்கு, எம்.எல்.ஏக்கு போட்டியிட முடியாது. நான் வேலையை விட்டுவிட்டு வரவேண்டும். ஒருவர் எம்.எல்.ஏவாக இருந்து எம்பியாகி விட்டார். இந்த எம்.எல்.ஏ பதவி காலியாகிவிட்டதென்றால், அதன்பின் வரும் இடைத்தேர்தல் தேவையற்றது. விஜயதாரணி நீக்கப்பட்டார் என்றால், இடைப்பட்ட காலத்திற்கு இரண்டாவதாக வந்தவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுங்கள். மக்கள் பணத்தில் தானே தேர்தல் நடத்துவீர்கள், என் பணத்தை ஏன் உங்களது பதவி ஆசைக்காக வீணடிக்கிறீர்கள்.
அப்படி இல்லையென்றால், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 20 கோடி ஆகுமென்றால், அதை விஜயதாரணியிடம் வாங்கிவிடுங்கள்” என்றார்.