ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வருகிற பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுதினம் முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல், விஜயகாந்த்தின் தேமுதிக மற்றும் டிடிவி தினகரனின் அமமுகவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இடைத்தோ்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டாலும், அக்கட்சி இருவேறு அணிகளாக பிரிந்து கிடப்பதால், வேட்பாளா் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றநிலையில், கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த சீமான், நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுகிறார் என்றும், ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது எனவும், அதில் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஈரோடில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். மேலும் அவர், கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.