``அஞ்சு விரல் போதும்: ஆளுநர் 6வது விரல் அதை வெட்டியெறிய வேண்டும்” - சீமான் காட்டம்

``அஞ்சு விரல் போதும்: ஆளுநர் 6வது விரல் அதை வெட்டியெறிய வேண்டும்” - சீமான் காட்டம்
``அஞ்சு விரல் போதும்: ஆளுநர் 6வது விரல் அதை வெட்டியெறிய வேண்டும்” - சீமான் காட்டம்
Published on

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்கள், 20 தொகுதிகளில் பெண்கள் நிறுத்தப்படுவர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஆகச்சிறந்த கல்வியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவை போற்றுகின்ற நாள் இன்று. நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கும் யாரும் அடிமை இல்லை என்றவர் அவர். `கோவில்களில் எப்போதும் ஆடுகளை பலியிடுகிறார்களே தவிர, சிங்கங்களை அல்ல என்று மிகப் பெரிய பழமொழி தந்த மிகப் பெரிய தலைவர் அம்பேத்கர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டின் பெருமை. நாட்டை தாண்டி புகழ்பெற்ற தலைவர்கள் என்றால் அது அம்பேத்கர் மற்றும் காந்தி தான், வல்லபாய் பட்டேல் அல்ல. பாராளுமன்ற கட்டடத்திற்கு அண்ணல் அம்பேத்கரை பெயரை வைப்பது பொருத்தமானதாக இருக்கும். அவரது நினைவு நாளில் மீண்டும் அதை வலியுறுத்துகிறோம். அது அவருக்கு பெருமை அல்ல, இந்த நாட்டு மக்களுக்கு பெருமை.

ஒரு சமநிலை சமூகம் படைக்க வேண்டும் என்று போராடியவர் அம்பேத்கர், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல அவர். அவர் உலகெங்கிலும் தாழ்த்தப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ள சமூகத்திற்கான தலைவர். அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதில் பெருமை அடைகிறோம் பாஜக அம்பேத்கரை கொண்டாடுவதற்கு காரணம் வாக்கு மட்டுமே. வல்லபாய் பட்டேலுக்கு எதற்கு 3 ஆயிரம் கோடியில் சிலை வைத்தீர்கள் என பாஜக-வை கேட்கிறோம். இந்தியாவை தாண்டி வல்லபாய் பட்டேலை எங்கேயாவது யாருக்காவது தெரியுமா? மலேசியா, சிங்கப்பூரில் யாருக்காவது தெரியுமா அவரை?” என்றார்.

மேலும் பேசுகையில், “என்.எல்.சி நிலத்தில், வேலை வாய்ப்பு வேறொருவருடையதாக உள்ளது. அதை எதிர்த்து போராட போகிறோம். தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வருகையால், நம் மக்களை உழைப்பிலிருந்து நுட்பமாக வெளியேற்றி விடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் உள்ளனர். வட மாநிலத்தவர்களுக்கு வாக்குறுதியை கொடுத்தால் இந்த நிலத்தின் அரசியலை அவர்கள் தீர்மானித்து விடுவர்.

ஈழத்தில் என்ன நடந்ததோ அதுவே தமிழகத்திலும் நடந்து விடும். வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால், அவர்களுக்கு வாக்கு அட்டை கொடுக்காதீர்கள். குஜராத் தேர்தலை பொறுத்தவரை, பாஜகவிற்கு வெற்றி என்று சொல்லுவதைவிட விஷம் குடித்து சாகலாம்... தூக்கில் தொங்கலாம். வெற்றி என்று சொல்வது வெட்கமாக இல்லையா?” என்றார்.

மேலும் பேசுகையில், “சவுக்கு சங்கர் விரும்பினால் அவருக்கு ஆதரவு தெரிவிப்போம், பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்கள் 20 தொகுதிகளில் பெண்கள் நாம் தமிழர் சார்பில் நிறுத்தப்படுவர். நான் கருத்துரிமைக்கு ஆதரவானவன் நான் தனித்து தான் போராடுவேன். கிஷோர் கே.சுவாமி கைதை கண்டித்துள்ளேன். மாரிதாஸ் கைதை கண்டித்துள்ளேன்” என்று கடுமையாக சாடினார் சீமான்.

“ஆளுநர் என்பவர் 6-வது விரல். அதை நாம் வெட்டி எறிய வேண்டும். அஞ்சு விரல் போதும் எங்களுக்கு. ஆறாவது விரல் தான் ஆளுநர். ஜெயலலிதா, கலைஞர் இருந்த போது ஆளுநர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது. அரசு எடுக்கிற முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைக்கவில்லை. ஆளுநர் காசு வாங்கிக் கொண்டு கையெழுத்து போடாமல் இழுத்துக் கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com