மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாய கடமை என தெரிவித்தார். தற்காலச் சூழலில் கல்வி தனியார்மயமாக்கப்பட்டு கல்வி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடப்பதாகவும் சீமான் விமர்சித்து இருந்தார்.
ஏழை - பணக்காரன் என்ற பாகுபாடின்றி கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தும் உன்னதப் பணிகளை மேற்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தனது அன்புத் தளபதியுமான விஜய்க்கு வாழ்த்துகள் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, புதியதலைமுறைக்கு பிரத்யேகமாக தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சீமான், தம்பி விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறினார். இதனைக் கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
சீமான் இதுதொடர்பாக பேசுகையில், “அவரது பல பிரச்னைகளில் உடன் நின்றிருக்கின்றேன். கத்தி திரைப்பட பிரச்னை வந்தபோதும் அவருடன் நின்றேன். தலைவா திரைப்படத்தில் Time to lead என்ற வார்த்தைக்கு பிரச்னை வந்தபோதும் அவருடன் நின்றேன். கூட்டணிக்காண அஸ்திவாரம் என எடுத்துக் கொள்ளலாமா என கேட்டால், எடுத்துக்கொள்ளுங்கள” என தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கிய மறுநாளே, விஜய்யின் கல்வி விருது விழாவை சீமான் வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். இது, 2026-ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக்கு நாதக தயாராகிறதா? தொடர்ந்து தனித்தே போட்டியிடும் முடிவைக் கைவிட்டு கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.