செய்தியாளர்: ரமேஷ்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்...
“நாங்கள் வெற்றிபெற்றால், படித்தவர் படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை தருவோம். மேலும் இனி படிக்காதவரே இல்லை என உருவாக்குவதே எங்கள் வேலை. போலவே என் நிலத்தை நஞ்சாக்கும் தொழிற்சாலைகள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும். பாலின் சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி. பால் இருந்தால் அந்த நாட்டில் பசி இல்லை. ஆகவே அப்படியொரு நிலையை உருவாக்குவேன். மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன்.
இந்து என்ற மதத்தை பிடித்துக் கொண்டு இந்தியன் என்ற உணர்வைத் தூண்டி இந்த நிலத்தை கைப்பற்ற பார்க்கின்றனர். அதற்கு ஏமாறக்கூடாது. நீ இந்தியனும் அல்ல, திராவிடனும் அல்ல. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொல்குடி தமிழன் நீ என புரிந்து கொள்ள வேண்டும்.
கடைத்தெரு அங்காடிகளில் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் ஆங்கில பெயர் பலகைகள் உள்ள கடைகளுக்கு, இரண்டு முறை நோட்டீஸ் விடுவேன்; மூன்றாவது முறை திண்டுக்கல் பூட்டை கடைக்கு பூட்டிவிட்டு சாவியை எடுத்து வந்து விடுவேன்.
கருணாநிதியை எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் என் அண்ணனை, என் தலைவனை அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் எனக்கு அவரை பிடிக்கவில்லை. இதில் பெரிய கொள்கை எல்லாம் கிடையாது. தனிப்பட்ட காரணமும் கிடையாது. மற்றொருபக்கம் என் அண்ணனை, தான் பெற்ற மகனை போல் எம்.ஜி.ஆர் நேசித்தார். எல்லா உதவிகளையும் செய்தார். அதனால் எனக்கு எம்ஜிஆரை பிடிக்கிறது.
நான் பேசுவது போல தமிழக அரசியலில் மனதில் பயமின்றி, கவலையின்றி தங்கு தடையின்றி யாராலாவது பேச முடிகின்றதா? அவர்களுக்கு பயம் உள்ளது. என்னிடம் ஒண்ணுமே இல்லை. அதனால் நான் பயப்படவில்லை.
நாட்டின் நிதியமைச்சர் தேர்தலில் போட்டியிடவில்லை. காரணம் கேட்டால், பணம் இல்லை எனக் கூறுகிறார். காசே இல்லாமல் நான் 40 ஊரில் போட்டியிடுகிறேன். ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, சும்மா அதிரும் பாரு... ஒரு ஓட்டை போட்டு விட்டு வீட்டில் படுத்து விடு... நாட்டை என்னிடம் கொடு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.