தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வை கோ உரையாற்றினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாகக் கூறி வைகோ மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட்டது
இதற்கிடையில் பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் ’ஈழத்தில் நடப்பது என்ன’ என்ற தலைப்பில் நடந்த கூடத்தில் பேசியது தொடர்பாக, க்யூ பிரிவு வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வைகோவை 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்தது.
இந்நிலையில் ’நான் குற்றம் சாட்டுகிறேன்’ புத்தக வெளியீட்டு விழா பேச்சு தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாகக் கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ. பின்னர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் 52 நாட்கள் கழித்து ஜாமினில் வெளியில் வந்தார்.
பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக ஜூன் 19ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்த, நீதிமன் றம், அவருக்கு ஓராண்டு சிறைதண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. உடனடியாக அபராதத்தைக் கட்டிய வைகோவின் வழக்கறிஞர்கள், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு உடனடியாக மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்று தீர்ப்பு ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதோடு அவருக்கு ஜாமின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜாமினும் வழங்கியது.