ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாலத்தை கடந்து செல்லும் வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இரு சக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள், ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் என அனைத்தும் தீவிர சோதனைக்குப்பின்னே அனுமதிக்கப்பட்டன. மேலும் ராமேஸ்வரத்திலுள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ''பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
ஆனால் அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் இல்லை. இருந்தபோதும் வெடிகுண்டு துப்பறியும் நிபுணர்கள், வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களுடன் இரண்டு பாலங்களிலும் முழுமையாக சோதனையிடப்பட்டது. இதில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து 2 பாலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.