சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருநபர் குழு அளிக்கும் வரை போராட்டத்தை ஒத்திவைக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து நடத்தப்பட்ட இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளது. இதனால் போராட்டம் தீவிரமடைந்து தொடர்ந்து வருகிறது.
4 நாட்களாக உணவு உண்ணாமல் போராடி வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர்கள் பலரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்களில் 88 பெண்கள் உட்பட மொத்தம் 163 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக 170க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்று மட்டும் 29 பெண்கள் உட்பட 55 பேர் உண்ணாவிரதம் காரணமாக மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களின் போராட்டத்தால் டிபிஐ வளாகத்தில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து, வரும் 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. எனவே 3ஆம் பருவத்திற்கான சீருடைகள், இலவச புத்தகங்களை வழங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால் அந்தப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.