கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக தொடரும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்களும் பொதுமக்களும் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இரயுமன்துறையில் கரையில் நிறுத்தப்பட்டிருந்த 5 சிறுபடகுகள் மற்றும் ஒரு படகின் எஞ்சின் ஆகியவை கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளன. இதேபோல், குளச்சல் பகுதியில் 3 சிறுபடகுகளும் கடலில் அடித்துச்செல்லப்பட்டன. கடந்த ஆண்டு இதேபோன்ற சீற்றத்தால் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டிருந்த தேங்காய்பட்டினம்- இரயுமன்துறை சாலையில் தற்போது கடல் நீர் புகுந்து கடல் மண் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கடற்கரை கிராமங்களில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதலே வருவாய்த்துறையினர் இப்பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இருப்பினும், மேற்குகடற்கரை பகுதிகளில் தரமான முறையில் தடுப்பு சுவர் அமைக்கப்படாததே பாதிப்புகளுக்கு காரணம் என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அத்துடன், மே, ஜூன் மாதங்களில் வழக்கமாகவே கடல்சீற்றத்தால் சற்று அதிக பாதிப்புகள் இருக்குமென்பதால், தடுப்பு சுவர்களை உயர்த்தி பலப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடல் சீற்றத்தால் குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல், வல்லவிளை, தேங்காப்பட்டினம், இரயுமன்துறை ஆகிய இடங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறையும் இணைந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக ஜெயக்குமார் கூறினார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்