தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மித முதல் அதி கனமழை வரை பெய்துவருகிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி,
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாகை கீழ்வேளூர் வட்டத்திலும் இன்று (08.01.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: திருவண்ணாமலை, காரைக்கால், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை காரணமாக, கடலுக்கு செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியிலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. போலவே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை தொடர்ந்துவரும்போதிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை.
மழையின் அளவு:
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 22 செமீ, கொள்ளிடம் பகுதியில் 18 செமீ, திருவாரூரில் நேற்று காலை 6 மணி முதல் தற்போது வரை 21.2 செமீ, நன்னிலம் 16. 4 செமீ, குடவாசல் 13.4 செமீ, மணல்மேடு 10.5 செமீ என்று மழையின் அளவு பதிவாகியுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.