"இடுப்பிற்கு கீழ் உணர்ச்சியில்லை"- சாதிக்க உதவி கோரி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்

"இடுப்பிற்கு கீழ் உணர்ச்சியில்லை"- சாதிக்க உதவி கோரி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்
"இடுப்பிற்கு கீழ் உணர்ச்சியில்லை"- சாதிக்க உதவி கோரி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்
Published on

இடுப்பிற்கு கீழ் எந்த உறுப்புகளுக்கும் உணர்ச்சியில்லை. ஒரு இடத்திலிருந்து சற்றே நகர்வதற்கு கூட மற்றவர்களின் உதவி அவசியம். இவ்வாறான இக்கட்டான சூழலிலும் கணிணித் துறையில் சாதிக்கும் தன்னம்பிக்கையுடன் சிறப்பு நாற்காலிக்கான உதவி கோரி காத்திருக்கிறார் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் ஒருவர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். மாற்றுத் திறனாளியான ஜானுக்கு இடுப்புக்கு கீழ் எந்த உறுப்புக்கும் உணர்ச்சி கிடையாது. இயற்கை உபாதைகள் கழிவதைக் கூட அவரால் உணர முடியாது என்பது கூடுதல் ரணம். சிறு வயதிலிருந்து தாய் ஈஸ்வரியின் அரவணைப்பிலேயே வளர்ந்து வரும் ஜான், அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் படு கெட்டிக்காரரான ஜான் பீட்டர் கணிணி மீதுள்ள அதீத ஆர்வத்தால் அது சார்ந்த துறையில் சாதிக்கும் வேட்கையில் உள்ளார். அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்துவரும் ஜானின் தாயாருக்கு மாத வருவாய் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே. மகனின் கல்விக் கனவிற்கு முடிந்தவரை உதவி வரும் தாய் ஈஸ்வரி இடுப்பில் தாங்கியும், சைக்கிளில் அமரவைத்தும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் ஜானின் உடல் எடை கூடி, ஈஸ்வரியும் உடல் ரீதியாக சோர்வடைந்து வரும் நிலையில் ஜானின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு நாற்காலி வாங்க உதவி கோரி காத்துள்ளனர். தாய் மற்றும் மகனின் நிலையை அறிந்த போதி அறக்கட்டளையின் நிறுவனரும், ஆசிரியருமான ஆனந்தி கடந்த ஆறு ஆண்டுகளாக டயாபர் உள்ளிட்டவற்றை வழங்கி ஆதரவளித்து வருகிறார். ஜானுக்கு சிறப்பு நாற்காலி வாங்க நிதி திரட்டும் முயற்சிலும் ஈடுபட்டுள்ள அவர் சிறப்பு நாற்காலியை அவருக்கு வாங்கி தர பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

தந்தை விட்டுச் சென்ற நிலையில் ஜானின் ஒற்றை நம்பிக்கையாக உள்ள தாய் ஈஸ்வரி, தமக்கும் வயது அதிகரித்து வரும் நிலையில் மகனுக்கு சிறப்பு நாற்காலி கிடைத்தால் உறுதுணையாக இருக்கும் என கூறுகிறார். நல்ல நினைவாற்றலும், படிப்பில் ஆர்வத்துடனும் பல சவால்களுடன் வாழ்வை நகர்த்தி வரும் ஜான் பீட்டர் சிறப்பு நாற்காலிக்கான உதவி விரைவில் கிட்டும் என்ற நம்பிக்கை தோய்ந்த கண்களுடன் காத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com