''நீட் தேர்வு போன்று விளையாடமாட்டீர்கள் என நம்புகிறேன்'' - ஆசிரியை மகாலட்சுமி

''நீட் தேர்வு போன்று விளையாடமாட்டீர்கள் என நம்புகிறேன்'' - ஆசிரியை மகாலட்சுமி
''நீட் தேர்வு போன்று விளையாடமாட்டீர்கள் என நம்புகிறேன்'' - ஆசிரியை மகாலட்சுமி
Published on

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியை மகாலட்சுமி தன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்பு எதிராக ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமி நேற்று உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். இந்நிலையில் தன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஏதோ ஓர் அவசரத்தில் எடுத்த முடிவாக இந்தத் தொடர் போராட்டத்தை நான் அறிவிக்கவில்லை. தடாலடியாக அரசாணைகள் வெளியிடப்படுவது சமீப ஆண்டுகளில் நிகழ்ந்து வருகிறது. இதில் உச்சக்கட்டம் கல்வித் தொடர்பாக வரும் அரசாணைகள். ஒட்டுமொத்த குழந்தைகளையும் உளவியல் ரீதியாக குறிவைத்துத் தாக்கும் அரசாணைதான் 164. என் குரலற்றக் குழந்தைகளின் குரலை இந்த சமூகத்திற்கு நான் வெளிப்படுத்தியாக வேண்டிய அவசியமிருந்தது. அதன் பொருட்டே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தேன். 

இந்நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன்.என் குழந்தைகளின், தோழர்களின், சகோதரர்களின், உணர்வாளர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடைய உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறேன். நீட் தேர்வில் விளையாடியது போன்று இந்த விசயத்திலும் நீங்கள் விளையாடமாட்டீர்கள் என நம்புகிறேன். ஒருவேளை அப்படிச்செய்வீர்களேயானால் பெற்றோர்களும், குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், குழந்தை&மனித உரிமை செயற்பாட்டாளர்களும் களம் காண்பார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com