கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மதமாற்ற சர்ச்சை எழுந்தது. ஆசிரியர் மீது போலீசார் முன் மாணவி குற்றம்சாட்டும் பரபரப்பு வீடியோ வைரல் ஆன நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தையல் ஆசிரியை பியட்ரிஸ் தங்கம், தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசுவதோடு கிறிஸ்தவ மத பிராத்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழூந்தது. இந்த நிலையில் நேற்றும் தையல் வகுப்பிற்குச் சென்ற மாணவிகளிடம் இதேசெயலில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் புகாரளித்தனர். தொடர்ந்து போலீசாரும் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை அடுக்கினர். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன் போலீசார் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, மதமாற்ற சர்ச்சை வீடியோ தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தி அவர்மீது துறைவாரி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின் துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஆசிரியை பியட்ரிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.