அமைச்சர்களான மாணவர்கள் : புரட்சி செய்யும் புதுக்கோட்டைப் பள்ளி !

அமைச்சர்களான மாணவர்கள் : புரட்சி செய்யும் புதுக்கோட்டைப் பள்ளி !
அமைச்சர்களான மாணவர்கள் : புரட்சி செய்யும் புதுக்கோட்டைப் பள்ளி !
Published on

மாணவர்கள் மத்தியில் தலைமை பண்பு, ஜனநாயக விழிப்புணர்வு உள்ளிட்ட மாணவர்களின் திறன்களை மேம்படுத்த கடந்த காலங்களில் பள்ளி, மற்றும் கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடத்தப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் அது போன்ற நடைமுறை மறைந்து போனதால் மாணவர்களும் அதனை மறந்து போனார்கள். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  அன்னவாசல் அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் தேர்தல் நடத்தி அசத்தியுள்ளனர் ஆசிரியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அருகே மரிங்கிப்பட்டி உள்ளது. இங்கே அரசு ஆரம்பப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது.  இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியில்  36 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றார்கள். இந்தப் பள்ளியின் தனிச்சிறப்புகளில் ஒன்று ஆண்டுதோறும் ஜூன் மாதம் மாணவர் தேர்தலை நடத்துவதுதான்.  அதே போல் இந்தாண்டும் ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடனேயே மாணவர் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அன்று முதலே வேட்பாளர்களாக களமிறங்கும் மாணவர்கள் பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துவிட்டனர். இந்தாண்டு மூன்றாம் வகுப்பு மாணவர்களும் வேட்பாளர்களாக களமிறங்க தேர்தல் சூடுபிடித்தது.

மொத்தம் நான்கு முதன்மை அமைச்சர் பொறுப்புகளும் நான்கு இணை அமைச்சர் பொறுப்புகளுக்கும் மொத்தம் எட்டு மாணவர்கள் களத்தில் நின்றனர். அதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஓட்டுப் போட மாணவர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். எட்டு பேர்களின் பெயர்களை கரும்பலகையில் வரிசையாக எழுதி கட்டம்கட்டப்பட்டது. மாணவர்கள் வரிசையாக வந்து தங்களுக்கு பிடித்த மாணவர்கள் கட்டத்தில் ஒன்று என குறியிட்டுச் சென்றனர்.  வாக்களிக்கும்போது வாக்களிக்கும் மாணவர் மற்றும் ஆசிரியரைத் தவிர வேறு யாரும் இல்லாமல் ரகசியமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு மாணவர்கள் அனைவரையும் வகுப்பறைக்குள் வரவழைத்து வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதிக வாக்குகள் பெற்றவர்களுக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்பட்டன. உள்துறை அமைச்சராக திவ்யா, உள்துறை இணை அமைச்சராக பிரியதர்சினி, வெளித்துறை அமைச்சராக அழகப்பெருமாள், வெளித்துறை இணை அமைச்சராக சுதாகர், மதிய உணவுத்துறை அமைச்சராக சாதனா, மதிய உணவுத்துறை இணை அமைச்சராக சுகி, புலனாய்வுத் துறை அமைச்சராக காவியா, புலனாய்வுத்துறை இணை அமைச்சராக ஜனனி தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழியுடன் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இது பற்றி நான்காம் வகுப்பு மாணவி திவ்யாவிடம் கேட்டபோது...'' தேர்தலை அறிவித்ததிலிருந்து தேர்தல் எப்போது வரும் என்று காத்திருந்தேன். மாணவர்களிடம் எனக்கு வாக்களிக்கச் சொல்லி தினந்தோறும் பேசிக்கொண்டே இருந்தேன். என்னால் என் பள்ளிக்கு பெருமை வரும்படி நடந்து கொள்வேன் '' என்றார். தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி அவர்களிடம் கேட்டபோது '' நான் முன்னர் பணியாற்றிய பள்ளிகளில் இதுபோன்ற தேர்தல் கிடையாது. ஆனால் இங்கு வந்ததிலிருந்து ஆசிரியர் திருப்பதி அவர்கள் தொடர்ந்து தேர்தல் நடத்தி வருவதால் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஆண்டுதோறும் தேர்தல் நடத்தி வருகின்றோம். மாணவர்களும் அரசியலை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.'' என்றார்.

இதுபற்றி ஆசிரியர் திருப்பதி அவர்களிடம் கேட்டபோது '' நான் பணியேற்ற காலத்திலிருந்து மாணவர் தேர்தலை சிறப்பாக நடத்தி வருகின்றேன். வருகின்ற தலைமை ஆசிரியர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மாணவர்களிடம் இளம் வயதிலேயே அரசியல் அறிவை கொண்டு செல்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். எங்கள் பள்ளியில் நடைபெறும் மாலை நேர பிரார்த்தனை சிறப்பாக இருக்கும் '' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com