சென்னையில் சர்வதேச பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில் கைதான இருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை அதிரடியாக ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இவர்களுக்கு எப்படி ஜாமீன் அளித்தீர்கள்? என கீழ் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
சென்னை அருகே சர்வதேச பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததாக பள்ளி வாகன பெண் உதவியாளர் உட்பட இருவர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் இதில் வெளிநாட்டவர்கள் பலருக்கு தொடர்பிருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்டு வேறு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் தங்கள் புகாரை திரும்பப் பெறும்படி பள்ளி நிர்வாகம் ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் பெற்றோர் தங்களது மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி, கைதான இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி இவ்விருவருக்கும் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது என அறிக்கை அளிக்கும் படி திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். இவ்வழக்கு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.