‘என் மகன் உயிரைக் காப்பாற்றுங்கள்’: கலங்க வைக்கும் தாயின் மடிப்பிச்சை!

‘என் மகன் உயிரைக் காப்பாற்றுங்கள்’: கலங்க வைக்கும் தாயின் மடிப்பிச்சை!
‘என் மகன் உயிரைக் காப்பாற்றுங்கள்’: கலங்க வைக்கும் தாயின் மடிப்பிச்சை!
Published on

வேலூரில் மகனைக் காப்பாற்றுங்கள் என தாய் மடிப்பிச்சை கேட்டது பொதுமக்களை கண் கலங்க வைத்துள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா, கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அப்போது விளையாட்டு மைதானத்தில் பலூன்களை பறக்கவிட ஹீலியம் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது. எதிர்பாராத விதமாக ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார். அத்துடன் படுகாயம் அடைந்த சைதாப்பேட்டையை சேர்ந்த நவீன் என்ற மாணவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. 

அங்கு மாணவர் நவீனை சக்கர வாகனத்தில் அமரவைத்துக்கொண்டு வந்த, தாய் செல்வி மற்றும் தந்தை சிவலிங்கம் ஆகியோர் தங்கள் நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அத்துடன் தனது மகன் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் ஆண்டுப் பொது தேர்வு எழுதமுடியவில்லை. இதனால் தங்களது கனவும், தங்கள் மகனின் கனவும் கலைந்து போய்விட்டதாக கூறினர். ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மகனை குணப்படுத்த மருத்துவமனைக்கும், வீட்டிற்கு அலைந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தங்களிடம் பணம் இல்லாததால், மகனை குணப்படுத்த முடியாமல் மனவேதனையில் உள்ளதாக கூறினர். அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகமும் தங்களை கைவிட்டு விட்டதாக வேதனை தெரிவித்தனர். எனவே அரசு தங்கள் மகனை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த சம்பவத்தின் போது தனது மகனை குணப்படுத்த அங்கிருந்த பொது மக்களிடம் தாய் மடிபிச்சை எடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மகனை காப்பாற்ற தாய், தந்தை படும் துன்பத்தை பார்த்து அங்கிருந்த பொதுமக்களும், அதிகாரிகளும் கண் கலங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com