மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவிகளுக்கு அவர்களின் பள்ளி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் கடந்த 1-ஆம் தேதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற 3 மாணவிகளும்அடங்குவர். இந்த மாணவிகளுக்கு அந்தப் பள்ளி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுவர் விபத்தில் உயிரிழந்தவர்களுள் ஒருவரான அக்ஷ்யா என்ற மாணவி கரும்பலகையில் எழுதிய கடைசி எழுத்துகளையும் பள்ளி நிர்வாகம் அழிக்காமல் வைத்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை கே.எம்.தமிழரசி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கூறும்போது,“அக்ஷ்யா இந்த வகுப்பின் லீடராக இருந்தார். அவர் கரும்பலகையில் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த விபத்து நடப்பதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை அக்ஷ்யா கரும்பலகையில் தமிழ் எழுத்துகளை எழுதினார். அதன்பிறகு திங்கட்கிழமை வகுப்பிற்கு நாங்கள் வரும்போது அக்ஷ்யா எழுதிய எழுத்துகள் கரும்பலகையில் இருந்தன. ஆனால், அக்ஷ்யா உயிருடன் இல்லை.
(கோப்புப் படம்)
எனவே எங்களால் அவர் எழுதிய எழுத்துகளை அழிக்க முடியவில்லை. ஆகவே நாங்கள் அதனைக் கரும்பலகையில் வைத்துவிட்டோம். இந்த மூன்று பேரும் எங்களுடன் தற்போது இல்லை என்று நினைத்து பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.