சென்னையில் வடபழனி, வேளச்சேரி, கிண்டி, அண்ணாசாலை, கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்துவருகிறது. விட்டு விட்டு பெய்த கனமழையால் வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நேதாஜி சாலை உளிட்ட இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கிண்டியில் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கியதால் காலை முதலே வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. அதேநேரம் சாலைகளில் தேங்கிய மழைநீரை மின் மோட்டர்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதேநிலை தமிழ்நாட்டில் பல இடங்களிலும் தொடர்கிறது.
இதையொட்டி பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக சென்னை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.