நெல்லையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவிகளுக்காக கட்டப்பட்ட விடுதி ஒன்று, தற்போது மாணவிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதுகாப்பற்று காணப்படுகிறது.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட டவுணில் இருந்து தென்பத்து ஊருக்கு செல்லும் சாலையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை கீழ் பள்ளி மாணவியர்களுக்கான விடுதி கடந்த 2016-ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இங்கு நெல்லை மாவட்டத்திலுள்ள மாணவிகள் மட்டுமின்றி, தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற மற்ற மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் வந்து தங்கி கல்வி கற்கின்றனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள இந்த விடுதியானது, தற்போது வசிக்க முடியாத சூழ்நிலையில் காணப்படுகிறது. விடுதியின் தரைகள் பல இடங்களில் பெயர்ந்து காணப்படுகின்றது. விடுதியின் கட்டடங்கள் ஆங்காங்கே பல இடங்களில் விரிசல் விழுந்து காணப்படுகின்றது. இதனால் எந்நேரமும் சுவர் இடிந்து விழும் அபாய சூழல் நிலவுகிறது.
50 மாணவியருக்கு 3 கழிப்பறைகள் இருக்கும் நிலையில் அதில் ஒன்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மற்ற கழிப்பறைகள் பெயர்ந்து கால் வைத்தால் நாளுக்கு நாள் பூமிக்குள் புதைந்து கொண்டே வருகிறது. இதனால், அதிகாலை எழுந்து குளிப்பதில் தொடங்கி இரவு தூங்க செல்லும் வரை பல்வேறு விதமான பாதுகாப்பற்ற சூழ்நிலையே மாணவிகள் சந்தித்து வருகின்றனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த விடுதியானது 3 ஆண்டுக்குள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் கட்டடங்களை திருத்தி அமைப்பதற்கும், தரமற்ற நிலையில் கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீதும் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.