மதுரையில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கு வந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் துவக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 23 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமையாசிரியராகவும், மதுரையைச் சேர்ந்த குமேரேசன் உதவி ஆசியராகவும் உள்ளனர். ஆசிரியர் குமேரேசன் கடந்த ஒருவாரமாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இந்நிலையில் தலைமையாசிரியர் சரவணன் பள்ளிக்கு மதுபோதையில் வந்ததுடன், அசைவ உணவு வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் பள்ளியில் பணிபுரியும் ஒருவரிடம் தள்ளாடியபடியே சென்று உணவு வேண்டுமா என்றும் கேட்டுள்ளார். தலைமையாசிரியரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த நபர், கிராம மக்களிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து தலைமையாசிரியரைக் கண்டித்ததுடன், அவரை வீட்டிற்கும் அனுப்பியுள்ளனர். பின்னர் தங்களுடைய குழந்தைகளையும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, தலைமையாசிரியர் சரவணன் பலமுறை இதுபோன்று நடந்துக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என்றும் குற்றம்சாட்டினர். மாவட்ட கல்வி அதிகாரி மீனாவதியை கேட்டபோது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பள்ளியின் தலைமையாசிரியர் சரவணனிடம் கேட்டபோது, பள்ளியில் இருக்கும் ஊழியரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது வீண்பழி சுமத்தப்படுவதாக கூறினார்.