ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கண்ணனின் மகன் பள்ளிப்படிப்பை முடித்தவிட்டு, வேலை செய்து வருகிறார். மகளோ ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குடும்ப சூழல் காரணமாக, தந்தை கண்ணன் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை நேரத்தில் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்த நிலையில், விடுமுறை முடிந்து ஓரிரு நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்ல தயாராக இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் வீட்டில் இருந்த கண்ணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இதற்கிடையே, கண்ணனின் மகள் ஆர்த்திக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதால், இன்றைய தினம் பொருளியல் தேர்வு நடைபெற இருந்தது. தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த ஆர்த்திக்கு தந்தையின் உயிரிழப்பு அதிர்ச்சியைத் தந்தது. இருப்பினும், படிப்பில் கெட்டியாக இருக்கும் ஆர்த்தி நல்ல மதிப்பெண்ணை பெற்று கல்வியைத் தொடர வேண்டும் என்பதே, தந்தையின் கனவு என்பதால், அதனை மனதில் வைத்து, சோகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு தேர்வறைக்குச் சென்று தேர்வெழுதினார் ஆர்த்தி.
வீட்டில் தந்தையின் சடலம் வைக்கப்பட்ட நிலையில், கனத்த இதயத்துடன் சென்று தேர்வை எழுதி முடித்து வீடு திரும்பினார் ஆர்த்தி. அந்த நேரத்தில், தனது மகளை கட்டியணைத்து தாயும், உறவுகளும் கட்டியணைத்து கூறினர். தந்தை இறந்த சோகத்திலும், அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வறைக்குச் சென்று தேர்வெழுதிய மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.